
செர்டாங், ஜூலை 4 – நேற்று, புச்சோங் ‘லேக் எட்ஜ்’ பகுதியிலிருக்கும் விளையாட்டு மைதானத்திலிருந்து, பாட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை, திடீரென அங்கு வந்த நாய் ஒன்று தாக்கியதால், அவனது இடது கெண்டைக்கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
60 வயது மாதுவால் வளர்க்கப்பட்ட வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் வகை வளர்ப்பு நாய், வீட்டினுள் இருந்து ஓடி வந்து, சிறுவனைக் கடுமையாக தாக்கியதாக செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது ஃபரித் அகமது தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் இவ்வளவு நாட்களாக அப்பெண் உரிமம் இல்லாமல் நாயை வளர்த்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
விலங்குகள் சம்பந்தப்பட்ட அலட்சியத்திற்காக தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனையும் 2,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..
இந்நிலையில் அனைத்து செல்லப்பிராணி உரிமையாளர்களும் தங்களின் விலங்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும், பொதுப் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தல்கள் தராமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டுமென்று காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.