
இஸ்கண்டார் புத்ரி, மே-1, ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் பூட்டப்பட்ட வேனுக்குள் 4 மணி நேரங்களுக்கும் மேல் தனியாக விடப்பட்டு 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பள்ளி வேன் ஓட்டுநர் 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
56 வயது அவ்வாடவர் நேற்று முன்தினம் தாமான் புக்கிட் இண்டாவில் கைதானதாக, மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமராசன் கூறினார்.
பாலர் பள்ளி மாணவனான Yu Zie முன்னதாக நண்பகல் 12 மணிக்கு வேனுக்குள் பேச்சு மூச்சின்றி கிடந்தான்.
மற்ற எல்லா மாணவர்களையும் காலை 7.30 மணிக்கு பாலர் பள்ளியில் இறக்கி விட்ட ஓட்டுநர், இந்த ஒரு சிறுவனை மட்டும் மறதியால் வேனுக்குள்ளேயே விட்டு விட்டதாக நம்பப்படுகிறது.
இவ்வேளையில், வேன் ஓட்டுநரின் கவனக்குறைவே மகனை தாங்கள் பறிகொடுக்கக் காரணமென, 37 வயது தந்தை Teo Jia கூறினார்.
“பூட்டிய வேனுக்குள்ளிலிருந்து வெளியில் வர என் மகன் நிச்சயம் போராடியிருப்பான்; அதனை நினைக்கும் போதே நெஞ்சு நொறுங்குகிறது”
“ஓட்டுநரின் அலட்சியமே இதற்குக் காரணம்; எல்லா மாணவர்களும் வேனிலிருந்து இறங்கி விட்டார்களா என்பதை அவர் ஒருமுறை சரிபார்த்திருந்தால், தூங்கிக் கொண்டிருந்த என் மகன் உயிர் பிழைத்திருப்பான்” என அவர் வேதனையுடன் சொன்னார்.
பாலர் பள்ளியும் அலட்சியமாக இருந்துள்ளது; மாணவன் வரவில்லை என்றால் உடனடியாக பெற்றோரை அழைத்துத் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.
இனி இன்னொரு குழந்தைக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதால் போலீஸார் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென Teo Jia வலியுறுத்தினார்