
கோலாலம்பூர், ஜூன் 22 – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சாவின் வாவாசான் மற்றும் பெஜுவாங் (PEJUANG) ஆகிய இரு கட்சிகளைப் புதிய உறுப்புக் கட்சிகளாக இணைத்துள்ளது.
பெரிக்காத்தான் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தார் வெளியிட்ட அறிக்கையில், இரு கட்சிகளின் உறுப்பினர் விண்ணப்பங்களும் உச்ச மன்றக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை விரைவில் இறுதி செய்யவும் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, பெர்சத்து கட்சியின் நிலை குறித்து அண்மையில் பரவி வந்த ஊகங்களுக்கு பதிலளித்த பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், அந்த விவகாரம் நேற்றைய உச்ச மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அவசர உச்ச மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெர்சத்து தொடர்கிறது; என்றும் தொடரும்” என்று உறுதியாகக் கூறினார்.
அத்துடன், பெர்சத்துவின் உறுப்பினர் அந்தஸ்து குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், புதிய கட்சிகளின் இணைப்பு தொடர்பான விண்ணப்பங்களே கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதனால், பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து பெர்சத்து விலகக்கூடும் என்ற வதந்திகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், வாவாசான் மற்றும் பெஜுவாங் கட்சிகளின் இணைப்பு கூட்டணியின் அரசியல் சமன்பாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.



