
கோலாலாம்பூர், ஜூன்-11 – பெர்சாத்து கட்சியுடனான அரசியல் உறவை பாஸ் கட்சி திடீரென துண்டித்துள்ள நிலையில், தங்களை பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிக்குமாறு பாஸ் தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாக, மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP தலைவர் புனிதன் பரமசிவன் தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சூரி மொக்தார் தலைமையில் இன்று சுமார் 2 மணி நேரங்கள் நடைபெற்றக் கூட்டத்தின் போது, அவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
அச்சந்திப்பில் கூட்டணிக்கான கடப்பாடு குறித்தும் அதனை வலுப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.
அதோடு, மற்ற கூட்டணிகளில் சேருமாறு MIPP-க்கு அழைப்பு வந்திருப்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது; ஆனால், முடிந்த வரை பெரிக்காத்தானிலேயே இருக்குமாறு அஹ்மாட் சம்சூரி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், வரும் ஞாயிறன்று MIPP உச்சமன்றக் கூட்டத்தில் அது குறித்து பேசி முடிவெடுக்கப்படுமென தாம் தெரிவித்தாக புனிதன் சொன்னார்.
அண்மையில் பாஸ் கட்சி, பெர்சாத்து உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மாற்று அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்க பாஸ், கெராக்கான் மற்றும் MIPP ஆகிய கட்சிகள் இந்த வாரம் ஒரு முக்கிய சந்திப்பை நடத்துகின்றன.
ஏற்கனவே கெராக்கான் பெரிக்காத்தானுக்கான கடப்பாட்டை உறுதிச் செய்துள்ள நிலையில், பெர்சாத்து தனித்து விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



