பேச்சுவார்த்தை தோல்வி: “போருக்கு தயாராக உள்ளோம்” பாகிஸ்தானுக்கு தாலிபான் எச்சரிக்கை

காபூல், நவம்பர்-9,
இஸ்தான்புல்லில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனால் தாலிபான் அரசாங்கம் “போருக்கு தயாராக உள்ளோம்” என்று பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
துருக்கி மற்றும் கட்டார் நடத்திய இந்த பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்க்க முயன்றன.
ஆனால் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், அண்மைய எல்லைத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க மறுப்பதாக தாலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர், புதிய சுற்று பேச்சுவார்த்தைக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்து விட்டார்.
இந்த பேச்சுவார்த்தை முறிவால் எல்லையில் மீண்டும் ஆயுத மோதல்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும், இது வட்டார பாதுகாப்புக்கும் அமைதிக்கும் தீவிர ஆபத்தாகும் என்றும் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.



