
பேரணி வேண்டாம் என KDN அறிவுறுத்தல்; முடியாது என்கிறார் சாம்ரி வினோத்
புத்ராஜெயா, பிப்ரவரி-7,
இரு-நாள் அலுவல் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா வரும் இந்த நேரத்தில், பொது இடங்களில் குறிப்பாக தலைநகரில் எந்த பேரணியையும் நடத்த வேண்டாம் என பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அவ்வகையில், SOGO பேரங்காடி வளாகத்தில் இன்றிரவு பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ள தரப்பினரை போலீஸார் சந்தித்து, அவ்வெண்ணத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்துவர் என உள்துறை அமைச்சான KDN அறிக்கை வாயிலாகக் கூறியது.
நாட்டின் விருந்தினராக மோடி வருவது, இரு தரப்புக்கு இடையிலான வலுவான உறவை பிரிதிபலிக்கிறது.
அவர் இங்கு இருக்கும் காலம் நெடுகிலும் எந்தவொரு விரும்பத்தாக சம்பவங்களும் நடக்கக்கூடாது; அப்படி நடந்தால் அது விருந்தினருக்கும் மரியாதை அல்ல, நாட்டுக்கும் கெட்டப்பெயராகி விடும் என KDN சுட்டிக் காட்டியது.
நிலைமை இவ்வாறிருக்க, திட்டமிட்டபடி இன்றிரவு 8 மணிக்கு பேரணி நடைபெறும் என, அதனை ஏற்பாடு செய்துள்ளவரான சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சாம்ரி வினோத் அறிவித்துள்ளார்.
_”நம்மைக் குழப்பும் வகையிலான பிரச்சாரங்களை நம்பி ஏமாறாதீர்கள். ‘அத்துமீறுவோருக்கு’ எதிராக கண்டிப்பாக களத்தில் இறங்குவோம்”_ என தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 141 அரசு சார்பற்ற அமைப்புகளை சாம்ரி வினோத் அணித் திரட்டுகிறாராம்.
ஆனால், இது மக்களின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதால், அதனை தடுத்து நிறுத்துமாறுக் கூறி ஏராளமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



