கோலாலம்பூர், டிசம்பர்-10, நாட்டிலேயே பரம ஏழையாக உள்ள குடும்பங்களை அதிகம் கொண்ட இடமாக கோலாலம்பூர் திகழ்கிறது.
eKasih தேசிய வறுமைத் தரவுகளில் பரம ஏழைகளாக நாடு முழுவதும் பதிந்துகொண்டுள்ளவர்களில், தலைநகரில் மட்டுமே 474 பேர் இருப்பதாக கூட்டரசு பிரதேச அமைச்சு மக்களவையில் தெரிவித்தது.
கோலாலம்பூருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் கெடா உள்ளது; அங்கு 341 குடும்பங்கள் பரம ஏழையாக இருக்கின்றன.
அடுத்தடுத்த இடங்களில் சபாவும் ஜோகூரும் உள்ளதாக அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபா ( Dr Zaliha Mustafa) கூறினார்.
இவ்வேளையில், ஏழைக் குடும்பங்களை எடுத்துக் கொண்டால் ஆக அதிகமாக சபாவில் 71,900 குடும்பங்கள் உள்ளன.
அதற்கடுத்த நிலையில் சரவாக்கில் 58,877 குடும்பங்களும், கிளந்தானில் 58,684 குடும்பங்களும் உள்ளன.
ஆகக் குறைவாக கோலாலம்பூரில் 38 குடும்பங்கள் உள்ளன.
நவம்பர் 30 வரையில் நாடு முழுவதும் 2,191 பேர் பரம ஏழைகளாகவும், 391,539 பேர் ஏழைகளாகவும் வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
ஏழைகள் மற்றும் பரம ஏழைகளின் எண்ணிக்கைக் குறித்து பேராக், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.