
கோலாலாம்பூர், ஜூலை-31- 13-ஆவது மலேசியத் திட்டம் அனைவருக்கும் சொந்தமானது. தனிநபர்கள், சமூகங்கள், தனியார் துறை மற்றும் அரசாங்கம் இணைந்து மக்களின் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் உயர்த்த முயற்சிக்கும் வகையில் அது இருக்கும், இருக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் அதனை உறுதிச் செய்வது மிகவும் சவாலான ஒன்றுதான்; என்றாலும் மடானி அரசாங்கம் தன்னால் ஆன அனைத்தையும் செய்யுமென, இன்று மக்களவையில் 13-ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் சொன்னார்.
அதன் வெற்றியை உறுதிச் செய்ய, RM611 பில்லியன் ரிங்கிட் முதலீடு தேவை; இந்தத் தொகையிலிருந்து, வளர்ச்சிக்கான ஒதுக்கீடு RM430 பில்லியனாகவும் GLC மற்றும் GLIC நிதி ஒதுக்கீடு RM120 பில்லியனாகவும் உள்ளது.
இவ்வேளையில், அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டின் தனிநபர் மொத்த வருமானம் RM77,200 ஆக அதிகரிக்கும் என்றும், அதிக வருமானம் உள்ள நாட்டின் வரம்பை விட அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக நீதியின் கொள்கைக்கு இணங்க, டீசல் மற்றும் மின்சாரத்திற்கான இலக்கிடப்பட்ட மானியங்களை மேம்படுத்துவதன் மூலம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உற்பத்தித் துறையில் 700,000 புதிய வேலை வாய்ப்புகளையும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் மேலும் 500,000 தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க, அரசாங்கம் Perkasa TVET MADANI நிதித் திட்டம் மற்றும் TVET பயிற்சி நிதியை அறிமுகப்படுத்தும். 2,800 கிலோ மீட்டர் தூர கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் மக்களின் சுமைகளைக் குறைக்க STR மற்றும் SARA பங்களிப்புகள் போன்ற முயற்சிகள் தொடர்ந்து உதவும்.
மலிவு விலையில் உணவு கிடைப்பதை உறுதிச் செய்வதற்காக Jualan Rahmah, Menu, Kafe Rahmah, மற்றும் Bakul Rahmah போன்ற முக்கிய திட்டங்கள் மூலம் Payung Rahmah முயற்சி தீவிரப்படுத்தப்படும்.
பாலர் மற்றும் இடைநிலைப் பள்ளி சேர்க்கை விகிதங்களை 98% ஆக உயர்த்த அரசாங்கம் உறுதியாக உள்ளது.
2026 முதல் 2030 வரை 1 மில்லியன் மலிவு விலை வீடுகளைக் கட்டவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மடானி மக்கள் குடியிருப்பு, அரசு ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டம், புதிய வீடுகளைக் கட்டுவதற்கான உதவி, மக்கள் வாங்கும் சக்திக்குட்பட வீடமைப்புத் திட்டம், மாநில அரசுகள் மற்றும் தனியார் வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை அது உள்ளடக்கியிருக்கும்.
இவ்வேளையில், 5 வயதிலிருந்து பாலர் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கவுள்ளது.
சுகாதாரத் துறை RM40 பில்லியனைப் பெறும் – இது சுகாதார சேவைகளுக்கான மக்களின் பாக்கெட்டிலிருந்து செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது.
MASCO குறியீடு 8 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றின் கீழ் TVET பட்டதாரிகள் உட்பட பட்டதாரிகள் மற்றும் பகுதி திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் விரிவுப்படுத்தப்படும்.
அவர்களின் தகுதிகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப நியாயமான ஊதியம் கிடைப்பதை இது உறுதிச் செய்யும்.
2030 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை 15% இலிருந்து 10% ஆகக் குறைக்கவும் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
2030-ஆம் ஆண்டு வாக்கில் உயர் வருமானம் பெறும் நாடாகவும், உலகின் 30 மிகப் பெரியப் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உயரவும் மலேசியா இலக்குக் கொண்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.