
கோலாலம்பூர், ஜனவரி-3 – மலாக்கா, டுரியான் துங்காலில் கடந்தாண்டு நவம்பரில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தார், இன்று புக்கிட் அமானில் 5 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை சமர்ப்பித்தனர்.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை உடனடியாக கைதுச் செய்ய வேண்டும், விசாரணை நடைபெறும் வரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும், மலாக்கா போலீஸ் தலைவரை இடைநீக்கம் அல்லது பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதும் அக்கோரிக்கைகளில் அடங்கும்.
ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுவதையும், பொய்யான தகவல்கள் வழங்கப்படுவதையும் விசாரிக்க வேண்டுமென்றும் தேசியப் போலீஸ் படை தலைவரை அவர்கள் வலியுறுத்தினர்.
சம்பவம் நிகழ்ந்த 40-ஆவது நாளில் ‘புஷ்பநாதன் நடவடிக்கைக் குழு, ஏற்பாட்டில் இந்த மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.
வழக்கறிஞர்கள் Zaid Malek, ராஜேஷ் நாகராஜன், சமூக ஆர்வலர் அருண் துரைசாமி உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர்.
இதுவே பொது மக்களாக இருந்திருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்…
போலீஸார் சம்பந்தப்பட்டிருப்பதாலோ என்னவோ, இச்சம்பவம் வேறு மாதிரியாக கையாளப்படுவதாக Zaid Malek கூறினார்.
இதுவரை ஒருவர் கூட கைதுச் செய்யப்படவோ அல்லது இடைநீக்கம் செய்யப்படவோ இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
தவிர, விசாரணையும் மந்தமாக உள்ளது; இதுவரை உருப்படியான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
சம்பவத்தின் போது பதிவானதாகக் கூறப்படும் குரல் பதிவை, CyberSecurity Malaysia-விடம் அனுப்பி வைத்திருப்பதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை முன்னதாகக் கூறியிருந்தது.



