
கோலாலாம்பூர், டிசம்பர்-8 – மலாக்காவில் 3 இந்திய ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடனடியாக RCI எனப்படும் அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டு.
செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் மேலவையில் அதனை வலியுறுத்தியுள்ளார்.
RCI அமைப்பது, போலீஸ் படை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அவசியமென்றார் அவர்.
இவ்வேளையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும், பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், போலீஸார் உடல் கேமராவைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இறந்தவர்களில் ஒருவரது குடும்பம் வெளியிட்ட ஆடியோ குரல் பதிவுக்கும், போலீஸார் கூறிய தகவலுக்கும் பெரிய முரண்பாடு உள்ளது…அதாவது தாக்குதல் அல்லது பாராங் பயன்படுத்திய சத்தம் எதுவும் இல்லை, வெறும் துப்பாக்கிச் சத்தம் மட்டுமே கேட்பதை லிங்கேஷ்வரன் சுட்டிக் காட்டினார்.
ஒருவேளை அந்த குரல் பதிவில் இருப்பதே உண்மையென்றால், நடந்தது ‘நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலை’யாகும்; எனவே சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றார் அவர்.
இந்நிலையில், அச்சம்பவம் கொலை வழக்காக விசாரிக்கப்படாமல், ஏன் கொலை முயற்சியாக பதிவுச் செய்யப்பட்டது, குரல் பதிவைப் பெற போலீஸார் ஏன் அக்குடும்பங்களைத் தொடர்புகொள்ளவில்லை? எதற்காக அக்குடும்பங்களே புக்கிட் அமான் வரை சென்று அதனை ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது? குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விட்டனவா? என்பது போன்ற கேள்விகளை லிங்கேஷ்வரன் அடுக்கினார்.
அதோடு, சுட்டுக் கொல்லப்பட்ட மூவருமே குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்தார்களா? என கேட்ட லிங்கேஷ்வரன், அவர்களில் ஒருவருக்கு எந்தவொரு குற்றப்பதிவும் இல்லையென தெரிய வருவதாக சொன்னார்.
எனவே, இத்தனை கேள்விகளுக்கும் உள்துறை அமைச்சு தகுந்த பதிலை தந்து, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.



