
கோலாலம்பூர், மே 18- மலாயா பல்கலைக்கழகத்தின் (UM) முத்திரையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி , போலி அழகியல் மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதாக கூறப்படும் ஒரு நிறுவனத்திற்கு எதிராக போலீஸ், சுகாதார அமைச்சு மற்றும் உயர்க் கல்வி அமைச்சு ஆகியவரை விசாரணை நடத்த வேண்டும் என ம.சீ.ச பொது புகார்கள் பிரிவின் தலைவர் டத்தோஸ்ரீ மைக்கல் சோங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஐவரிடமிருந்து தனது தரப்பு புகாரை பெற்றுள்ளதோடு , அவர்கள் ஏமாற்றப்பட்டதன் விளைவாக சுமார் 100,000 ரிங்கிட் முதல் 180,00 ரிங்கிட் வரை இழந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்டதாகவும், சட்டவிரோதமாக மலாயா பல்கலைக்கழகத்தின் சின்னத்தைப் பயன்படுத்திய அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் அறிந்ததாக மைக்கல் சோங் தெரிவித்தார்.
பயன்படுத்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களும் அங்கீகாரங்களும் போலியானவை எனக் கண்டறியப்பட்டன.
பங்கேற்பாளர்களைப் பயிற்சியில் சேரச் சம்மதிக்க வைப்பதற்காக, அவர்கள் மலாயா பல்கலைக்கழகம் உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களையும் படங்களையும் பயன்படுத்தியுள்ளனர் என இன்று செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் நடத்தப்படாமல், ஒரு ஹோட்டலில் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டதோடு மட்டுமின்றி கிளினிக்குகள் அல்லது மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய ஊசிகள், ஊசி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அங்கு பயன்படுத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
சிலர் முழுப் பயிற்சிக் கட்டணத்தையும் செலுத்தத் தவறியதால், தற்போது கடன் வசூல் முகவர்களிடமிருந்து அச்சுறுத்தல்களைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.



