
சிங்கப்பூர், அக்டோபர்-4,
போதைப்பொருள் கடத்தல் வழக்கில சிங்கப்பூரில் சிறையில் உள்ள மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு, வரும் புதன்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
அவரது முன்னாள் வழக்கறிஞர் ரவி இன்று அத்தகவலை உறுதிப்படுத்தினார்.
பன்னீர் தூக்கிலப்படும் தகவல் அவரின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது; இதையடுத்து சாங்கி சிறைச்சாலையில் பன்னீரைப் பார்க்க வரும் 7-ஆம் தேதி வரை குடும்பத்துக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கும்பல் தொடர்பான முக்கியத் தகவல்களை பன்னீர் வழங்கியதை அடுத்து, சிறையில் அவரிடம் மலேசிய போலீஸார் விசாரணை நடத்தியதாக பன்னீரின் சகோதரி கூறியுள்ளார்.
இந்நிலையில், மலேசியப் போலீஸின் விசாரணை முடியும் வரை பன்னீரின் தூக்குத் தண்டனையை நிறுத்த சிங்கப்பூர் அதிகாரிகளை ரவி வலியுறுத்தியுள்ளார்.
தவிர, பன்னீர் அளித்த ஒத்துழைப்பு மற்றும் உளவுத் தகவல்களை அங்கீகரித்து அவருக்கு ‘Substantive Assistance’ சான்றிதழ் வழங்கவும் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே சமயம், மலேசிய அரசாங்கமும் தன் குடிமகனின் உயிரைக் காப்பாற்ற இதில் அவசரமாக தலையிட்டு, தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
51 கிராம் ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்திய வழக்கில் 2017-ஆம் ஆண்டு பன்னீர் செல்வத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீடும், அதிபரிடம் பொது மன்னிப்புக்கான மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டன; அண்மையில் கூட, தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரிய அவரின் மனுவை சிங்கை மேல்முறையீடு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதே போதைப்பொருள் குற்றத்திற்காக மற்றொரு மலேசியரான கே. தட்சிணாமூர்த்தி ஒரு வாரத்திற்கு முன்பு அக்குடியரசில் தூக்கிலிடப்பட்டார்.