
கோலாலம்பூர், ஜூலை 22 – இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மலேசியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
20.4 விழுக்காடு அதிகரித்து 16.94 மில்லியன் பார்வையாளர்களாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 14.07 மில்லியன் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்தனர்.
சிங்கப்பூர் 8.34 மில்லியன் பார்வையாளர்களுடன் அதிக வருகையைப் பதிவு செய்துள்ளது என்றும், இது முந்தைய ஆண்டை விட 26.5 விழுக்காடு அதிகம் என சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் ( Tiong King Sing ) தெரிவித்தார்.
இந்தோனேசியா 1.82 மில்லியன் பார்வையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து சீனா 1.81 மில்லியன் வருகையாளர்களுடன் 38.8 விழுக்காடு அதிகபட்ச வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
தாய்லாந்திலிருந்த வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 5.2 சதவீதம் அதிகரித்து 1.06 மில்லியனான உயர்ந்த வேளையில் இந்தியாவிலிருந்து 664,811 சுற்றுப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.
தொலைதூர நாடுகளிலிருந்து வந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனிலிருந்து வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் முறையே 16.6 விழுக்காடு மற்றும் 8.7 விழுக்காடு உயர்ந்ததாக இன்று நாடாளுமன்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப் பூர்வமான அறிக்கையில் Tiong King Sing தெரிவித்தார்.