Latestமலேசியா

மழலையர் பள்ளியில் ஏழு மாத குழந்தை கொலை -பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 14- மழலையர் பள்ளியில் ஏழு மாத ஆண் குழந்தையைக் கடந்த வாரம் கொலை செய்ததாக பராமரிப்பாளர் ஒருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் பரா அஸுரா முகமட் சாட் (Farah Azura Mohd Saad) முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவரான 28 வயது பல்கிஷ் முகமட் ஜிஹான், அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தார்.

இருப்பினும், இந்தக் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த வாக்கு மூலமும் பதிவு செய்யப்படவில்லை.

மே 5 ஆம் தேதி காலை மணி 9.30க்கும் மணி 10.40 க்கும் இடையில், பூச்சோங், பண்டார் கின்ராராவில் உள்ள Taska ஸ்ரீ இடமானில் முகமட் ஈடன் பஹீம் முகமட் நூர் ஷாபிக்கை ( Muhammad Eiden Faheem Mohammed Nor Syafiq ) கொலை செய்ததாக பல்கிஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை மற்றும் 12க்கும் குறையாத பிரம்படி வழங்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கப்படாத நிலையில், பிரேதப் பரிசோதனை மற்றும் இரசாயன அறிக்கையைச் சமர்ப்பிக்க ஜூலை 14 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!