
புத்ராஜெயா, மார்ச்-5-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மேலும் அதிகரிக்க, 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய நிதி மன்றக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு RM8.1 பில்லியனிலிருந்து கடந்தாண்டு RM10.3 பில்லியனாக இந்நிதி உயர்ந்தது.
இவ்வாண்டு அது RM10.5 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அன்வார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொது பட்டியல் நிதி, மாநில சாலை பராமரிப்பு நிதி மற்றும் சுற்றுலா வரி பகிர்வு போன்ற நிதி ஒதுக்கீட்டுளை மேம்படுத்த முடிவுச் செய்யப்பட்டது.
மாநில சாலை பராமரிப்பு நிதியின் பயன்பாட்டை விரிவுபடுத்தி, Bailey Bridge எனப்படும் modular எஃகு பாலங்களை கொள்முதல் செய்யவும் சாலைகளின் வடிகால் மற்றும் கால்வாய் பழுதுபார்ப்புகள் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தவிர, 2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டை முன்னிட்டு, சுற்றுலா வரி வசூலிப்பின் 100 விழுக்காட்டு தொகையும் மாநிலங்களுக்கே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த வரியின் 50 விழுக்காட்டு தொகை மட்டுமே மாநிலங்களுக்கு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உந்தச் செய்வதோடு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார்.



