
கோலாலம்பூர், மே 2- கோழி முட்டைகளுக்கான மானியத்தை அரசாங்கம், ஒரு முட்டைக்கு ஐந்து சென் என குறைத்திருந்தாலும், அதன் கட்டுப்பாட்டு விலை இன்னும் அப்படியே இருப்பதாக, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN) தெரிவித்தது.
A, B மற்றும் C தர முட்டைகளுக்கான மானிய குறைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு, தற்போதைய விலையில் முட்டைகளை விற்பனைச் செய்வதற்கு, வியாபாரிகள் பொறுப்பேற்க வேண்டுமென்று KPDN அமலாக்க இயக்குநர் ஜெனரல் டத்தோ அஸ்மான் ஆடம் கூறினார். அதே நேரத்தில் முட்டை வியாபாரிகள் தங்கள் விருப்பப்படி முட்டை விலையை உயர்த்த முடியாது என்றும் தெரிவித்தார்.
இம்மானியக் குறைப்பு ஆகஸ்ட் 1 முதல் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கோழி விலையில் ஏற்பட்ட மாற்றங்களைப் போலவே, முட்டை விலையின் மாற்றமும் நேர்மறையானதாக இருக்கும் என்று நம்புவதாக அஸ்மான் கூறினார்.
இவ்வேளையில் ஐந்து சென் மானியம் நீக்கப்பட்டதாகக் கூறி விலைகளை உயர்த்தும் தரப்பினர்கள் இருந்தால், அவர்கள் அதை சுற்றுலா அமைச்சிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.