
கோலாலம்பூர், ஏப்ரல்-11-உலக எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோனாஸ் நிறுவனத்திற்குக் கூடுதல் வருமானம் கிடைத்தாலும், ‘வானளவு’ உயர்ந்துள்ள அரசாங்கத்தின் மானியச் செலவுகளை அதனால் ஈடுகட்ட முடியவில்லை.
பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃப்ருல் அசிஸ் அவ்வாறு கூறியுள்ளார்.
எரிபொருள் மானியங்களுக்காக மாதத்திற்கு RM4 பில்லியன், வருடத்திற்கு RM48 பில்லியன் செலவாகின்றது.
அதே நேரத்தில், உலக எண்ணெய் விலை உயர்வால் கிடைக்கும் கூடுதல் வருமானம் வெறும் RM10–14 பில்லியன் மட்டுமே.
எனவே, செலவை ஈடுகட்டுவது சிரமமே என, ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு வீடியோவில் அவர் விளக்கினார்.
“பெட்ரோனாஸை, தோண்டத் தோண்டத் வற்றாத பணக் கிணறு போல பயன்படுத்துவது ஆபத்தானது; இதனால் எதிர்கால முதலீடுகள் மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும்,” என்றும் அவர் எச்சரித்தார்.
எண்ணெய் விலை உயர்வால் தேசியப் பெட்ரோலிய நிறுவனத்திற்கு நல்ல இலாபமே என பேச்சு கிளம்பியுள்ளது குறித்து அவர் அந்த வீடியோவை வெளியிட்டார்.
“பிரச்சனை பெட்ரோனாஸ் இலாபம் ஈட்டுகிறதா இல்லையா என்பது அல்ல. நாட்டின் செல்வத்தை எப்படி நிர்வகிக்கிறோம் என்பது தான் முக்கியம். அது இன்றைக்கு போதுமானதாகவும், நாளைக்கும் கிடைக்குமாறு இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
“பெட்ரோனாஸின் அனைத்து இலாபங்களையும் இப்போதே செலவழித்து விட்டால், முதலீடுகள் மந்தமாகும், உற்பத்தி குறையலாம், மேலும் எதிர்கால வருவாய்கள் பாதிக்கப்படும். அது சேமிப்பு அல்ல மாறாக எதிர்காலத்தைச் செலவழிப்பதற்கு சமம்,” என சாஃப்ருல் எச்சரித்தார்.



