
கோலாலாம்பூர், ஏப்ரல்-27-மித்ராவின் ‘தர்மா மடானி’ திட்டத்தின் கீழ், ஆலயங்கள் வழி சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் 20 மில்லியன் ரிங்கிட் நிதியுதவித் திட்டம் வேகம் பெற்றுள்ளது.
இந்த நிதியானது ஆலயங்களின் கட்டட வளர்ச்சி அல்லது உள்கட்டமைப்பு பணிகளுக்கானது அல்ல; மாறாக, ஆன்மீக மற்றும் சமூக மேம்பாடு, வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் கல்வி ஆதரவு ஆகியவற்றிற்கே இதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என, மித்ராவின் தலைமை இயக்குனர் ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.
குறிப்பாக, தேவார வகுப்புகள், பரதநாட்டியம், சிலம்பம், மாணவர்களுக்கான கல்வி போதனை வகுப்புகள், தலைமைத்துவ முகாம்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த அணுகுமுறையானது, இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, இந்தியச் சமூகத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் மையங்களாக மாற்றும் என, அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 1,000 ஆலயங்கள் பயனடையும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 20 மில்லியன் ரிங்கிட்டில், ஒவ்வோர் ஆலயத்திற்கும் 20,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே 155 ஆலயங்களுக்கு RM3.1 மில்லியன் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, நாளை பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில், மேலும் 300 ஆலயங்களுக்கு மொத்தம் 6 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
நிர்வாக வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்யும் வகையில், பயனடையும் ஆலயங்களின் பட்டியல் மித்ராவின் இணையத் தளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், மித்ராவின் இந்த உருமாற்றப் பயணத்திற்குப் பின்னால் ஒரு பெரும் சக்தியாகத் திகழும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு ரவீந்திரன் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ‘மலேசியா மடானி’ கோட்பாட்டின் அடிப்படையில், மித்ராவை மிகவும் வெளிப்படையான, துரிதமாகச் செயல்படும் மற்றும் இந்தியச் சமூகத்தின் உண்மையான தேவைகளில் கவனம் செலுத்தும் ஓர் அமைப்பாக டத்தோஸ்ரீ ரமணன் மாற்றியமைத்துள்ளார் என்றார் அவர்.



