
கூச்சிங், செப்டம்பர்-3,சரவாக் கூச்சிங்கில் அனைத்துலக வங்கி ஒன்றின் முன்னாள் அதிகாரிக்கு, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 40 மில்லியன் ரிங்கிட் அபராதம் மற்றும் 24 பிரம்படிகள் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Kho Yung Kang என்ற அந்த 39 வயது நபர், முதியவர்கள் 8 பேரை ஏமாற்றி 1.58 மில்லியன் ரிங்கிட் பணத்தை மோசடி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
16 மோசடிக் குற்றச்சாட்டுகள் மற்றும் 8 சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகளை அவ்வாடவர் ஒப்புக் கொண்டார்.
அதிக இலாபம் தரும் போலி முதலீட்டுத் திட்டங்களைக் காட்டி, 60 முதல் 75 வயதுடைய முதியவர்களிடம் கையெழுத்து மற்றும் கை விரல் ரேகைகளை இவர் பெற்றுள்ளார்.
பின்னர் அந்தப் பணத்தை அவர்களின் கணக்குகளில் இருந்து தனது சொந்த தேவைக்காகப் பிற கணக்குகளுக்கு அவர் மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகள் அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



