
வாஷிங்டன், செப்டம்பர்-3,உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை, ‘ட்ரம்ப் நீரிணை’ எனப் பெயர் மாற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தற்போது இந்தப் பாதையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் பெயரை மாற்றிவிட்டால் அமெரிக்காவைப் போல இதுவும் மேலும் முக்கியத்துவம் பெறும் எனக் கூறிக் கொண்டார்.
ட்ரம்பின் இந்த யோசனைக்கு வெள்ளை மாளிகையும் ஆதரவு தெரிவித்துள்ளது.
‘ட்ரம்ப் நீரிணை’ என பெயரிடப்பட்ட பாரசீக வளைகுடாவின் வரைபடத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, “இந்தப் பெயர் கேட்பதற்கு நன்றாக உள்ளதே” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே மெக்சிகோ வளைகுடா மற்றும் ஆண்டாரியோ ஏரி ஆகியவற்றின் பெயர்களை மாற்ற ட்ரம்ப் முயற்சித்த நிலையில், தற்போது இந்த புதிய யோசனை வெளியாகி உள்ளது.
ஈரானுடனான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய மையப் பகுதியாக இருக்கும் இந்த நீரிணையின் பெயர் மாற்ற விவகாரம், தெஹ்ரானை மேலும் சினமடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



