
ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.10-திரெங்கானுவில் முறையான தேசியச் சின்னங்கள் இல்லாத ‘ஜாலூர் கெமிலாங்’ கொடி பறக்கவிடப்பட்ட சம்பவத்தில் அம்னோ இளைஞர் பிரிவு மௌனம் காத்து வருவது ஏன் என புக்கிட் ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான விஷயங்களில் கொதித்து எனும் அம்னோ இளைஞர் பிரிவு, கருத்து ஏதும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருவது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது.
தேசியக் கொடியை உட்படுத்திய பல விவரங்களில் இதற்கு முன் அம்னோ இளைஞர் பிரிவு தலையிட்டு பெரும் கண்டன குரல் எழுப்பியிருந்தது. தற்போது சத்தமிடாமல் இருப்பது ஏன்? ஒருவேளை, அச்சம்பவம் பினாங்கில் நடந்திருந்தால், இந்நேரம் பெரும் சலசலப்பாக ஆக்கப்பட்டிருக்கலாம்.
வேறு மாநிலத்தில் நிகழ்ந்திருப்பதால், அவ்விஷயம் அம்னோ இளைஞர் பிரிவின் கண்ணில் படவில்லையோ அல்லது பேசும் சக்தி இல்லாமல் போயிருக்குமோ என ஆர். எஸ்.என் ராயர் வினவினார்.
திரங்கானு, Dataran Batu Buruk பகுதியில், பிறை மற்றும் நட்சத்திரச் சின்னம் இல்லாத ‘ஜாலூர் கெமிலாங்’ ஏற்றப்பட்ட சம்பவம் வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல.
அது தற்செயலாக நிகழ்ந்த ஒன்று என திரெங்கானு மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தார் குறிப்பிட்டிருந்தார். அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த ‘ஜாலூர் கெமிலாங்’ கொடியில் பிறை மற்றும் நட்சத்திரச் சின்னம் உண்மையில் இருந்தது. தையல் பிரிந்ததால் அப்பகுதி தனியாகக் கழன்று விட்டது.
அக்கொடியை அகற்றி விட்டு, புதிய கொடியை வைப்பதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோலா திரெங்கானு மாநகர மன்ற மேயர் தெரிவித்துள்ளார்.
Batu Burukவில் பிறை மற்றும் நட்சத்திரச் சின்னம் இல்லாத தேசியக் கொடி இருந்ததைக் காட்டும் காணொளி ஒன்று முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது. அது இணையப் பயனர்களிடையே பரவலான கவனத்தையும் விவாதத்தையும் தூண்டியது குறிப்பிடத்தக்கது.



