
குவாந்தான், ஆகஸ்ட் 10 – குவாந்தானில் ஆகஸ்ட் 4ஆம் தேதி கார் மோதியதில் படுகாயமடைந்த 15 வயது மாணவரின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
சுங்கை இசாப் இடைநிலைப்பள்ளி (SMK Sungai Isap) மாணவரான அவர், தாடை முறிவு, கன்னம் மற்றும் இடது கண்ணிமையில் காயம் உள்ளிட்ட பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தாடையில் உலோகத் தகடு பொருத்தும் அறுவைச் சிகிச்சை முடிந்துள்ள நிலையில், மேலும் சில சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
விசாரணையில், வளைவில் சென்றபோது 20 வயது கார் ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் சென்று சைக்கிளில் சென்ற சிறுவனை மோதியதாக போலீஸ் தெரிவித்தது.
இச்சம்பவம் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 15,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



