
கோலாலம்பூர், செப்-25-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கின் வீட்டுக்காவல் தொடர்பான தர செயல்பாட்டு நடைமுறை SOP மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தங்களுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ இதுவரை கிடைக்கவில்லை என அவரது மகள் Nooryana Najwa தெரிவித்துள்ளார்.
வீட்டுக்காவலுக்காக Langgak Duta இல்லத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் சிறைச்சாலைத் துறையிடமிருந்து தகவல் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
வீட்டுக்காவலை நடைமுறைப்படுத்துவதற்கான இறுதி விவரங்கள் இன்னும் தெரியாததால், அதிகாரப்பூர்வ தகவலுக்காக குடும்பத்தினர் காத்திருப்பதாக Nooryana தெரிவித்தார்.
இதனிடையே, அபராதத்தைச் செலுத்த அம்னோ தொடங்கியுள்ள நிதி திரட்டும் முயற்சிக்கும் பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வழங்கும் ஆதரவுக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
SRC International வழக்கின் எஞ்சிய தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக்காவலில் அனுபவிக்க நஜிப்புக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும், அவர் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும்.
நஜிப் Langgak Duta இல்லத்தில் சிறைச்சாலைத் துறையின் மேற்பார்வையில் வீட்டுக்காவலில் இருப்பார் என்றும் குடும்பத்தினரைச் சந்திக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர் அங்கு வசிக்காததால் அந்த வீடு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார்.



