Latestமலேசியா

முஸ்லீம் அல்லாத அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஆண்டுதோறும் அரசாங்க மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்; அமைச்சர் அறிவிப்பு

புத்ராஜெயா, நவம்பர்-28, ஏற்கனவே நிதியுதவி கிடைத்த வழிபாட்டுத் தலங்கள் உட்பட முஸ்லீம் அல்லாத அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஆண்டுதோறும் அரசாங்க மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அவற்றைத் தடுக்கும் எண்ணமில்லை என, KPKT எனப்படும் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) அறிவித்துள்ளார்.

விண்ணப்பத்தாரர்களின் தேவைகள் அடிப்படையில் அதாவது அவசரமாக நிதித் தேவைப்படும் ஆலயங்கள் மற்றும் இதுவரை நிதியுதவிப் பெற்றிராத வழிபாட்டுத் தலங்களுக்கு அதில் முன்னுரிமை வழங்கப்படும்.

அதுவே மடானி அரசாங்கத்தின் கடப்பாடு என்றார் அவர்.

யாரும் ஒதுக்கப்படவோ புறக்கணிக்கப்படவோ மாட்டார்கள் என, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

கடந்த மாதம் வரை, இந்து ஆலயங்கள், சீன கோயில்கள், சீக்கிய குர்ட்வாராக்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள் என 422 முஸ்லீம் அல்லாத வழிப்பாட்டுத் தலங்களின் பராமரிப்புச் செலவுகளுக்கு மொத்தம் 46.13 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது.

அவற்றில் 147 இந்து ஆலயங்களும் 25 சீக்கியக் கோயில்களும் மட்டுமே 21.35 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றதாக அமைச்சர் கூறினார்.

2025 பட்ஜெட்டில் கூட, முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை ஙா கோர் மிங் சுட்டிக் காட்டினார்.

மக்களுக்கு அனைவரும் மனதார உதவ வேண்டும்; அதை விடுத்து குறிப்பிட்ட விவகாரங்ளை அரசியலாக்கும் நோக்கில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி குழப்பக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பேராக், தைப்பிங்கில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு அரசாங்க மானியங்களை வழங்கிய நிகழ்வில் அமைச்சர் அவ்வாறு கூறினார்.

ஏற்கனவே நிதியைப் பெற்ற முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு நிதி கேட்டு விண்ணப்பிக்க முடியாதவாறு புதியக் கட்டுப்பாட்டைக் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, KPKT துணையமைச்சர் முன்னதாக மக்களவையில் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

முஸ்லீம் அல்லாதவர்களிடமிருந்து கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், இன்று அமைச்சர் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!