
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) அழைப்பை ஏற்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வரும் ஆகஸ்ட் 5 முதல் 10 வரை அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இதையடுத்து, 1967-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் தூதரக உறவு தொடங்கியது முதல், ரஷ்யாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளும் முதல் மாமன்னர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
அரச தந்திர உறவுகளில் மலேசிய மன்னராட்சி முறைக்கு இருக்கும் முக்கியப் பங்கை இப்பயணம் உணர்த்துவதாக, இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கை கூறியது.
இருவழி உறவுகளை வலுப்படுத்துவதோடு, வாணிபம், உயர் கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஒத்துழைப்புக்கும் மாமன்னரின் வருகை வழிகோலும் என அவ்வறிக்கை மேலும் கூறிற்று.
மோஸ்கோவில் இருக்கும் போது மாமன்னருக்கு ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்லினில் (Kremlin) சடங்குப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் அதிகாரத்துவச் சந்திப்பை நடத்துவர் என தெரிவிக்கப்பட்டது.