Latestமலேசியா

ராக்கி மரணம்: அமலாக்கம் என்ற பெயரில் விலங்குகளுக்கு கொடுமை செய்ய கூடாது – மலேசிய வழக்கறிஞர் சங்கம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-கடந்த ஜூலை 29 ஆம் தேதி சிலாங்கூரில், கிள்ளான் மாநகர் மன்றம் மேற்கொண்ட தெருநாய் ஒழிப்பு நடவடிக்கையின் போது ராக்கி என்ற நாய் உயிரிழந்தது குறித்து மலேசிய வழக்கறிஞர் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

சூழ்நிலை எப்படி இருந்தாலும், விலங்குகள் மீதான கொடுமை ஒரு போதும் தீர்வாகாது. எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும் எந்தவோர் அமலாக்கமும் ஒரு விலங்குக்குத் தேவையற்ற வலி, துன்பம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடாது என அச்சங்கத் தலைவர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார்.

காவல் துறையும் சிலாங்கூர் கால்நடை சேவைகள் துறையும் ராக்கியின் மரணம் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. எனினும் 2015-ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டத்தின் கீழ் விசாரித்து வந்தாலும், அது தீவிரத்தன்மையையும் நோக்கத்தையும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை.

AWA 2015 சட்டமானது விலங்குகளை உணர்வுள்ள உயிரினங்களாக அங்கீகரிப்பதோடு, கொடுமைகளைத் தடுக்க மிகக் கடுமையான தண்டனைகளையும் வழங்குகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

விலங்குகள் மீதான கொடுமை சகித்துக் கொள்ளப்படாது என்றும், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் என அனைவருக்கும் அது பொருந்தும் என்றும், சிலாங்கூர் மாநிலத்தின் Tengku Permaisuri, Hajjah Norashikin வெளியிட்ட அறிக்கையைத் தாங்கள் வரவேற்பதாகவும் ஆனந்த் ராஜ் குறிப்பிட்டார்.

AWA 2015-இன் பிரிவு 29-இன் படி, ஒரு விலங்குக்கு உரிமம் பெறப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்களோ அல்லது அமலாக்க அதிகாரிகளோ, அந்த விலங்குக்கு எதிராக வன்முறை அல்லது கொடுமை இழைப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. அதே சமயம் AWA 2015-இன் பிரிவு 30-இன் கீழ், சில குறிப்பிட்ட விதிவிலக்குகளைத் தவிர, விலங்கைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ள, தெரு நாய்களைப் பிடிக்கும் தர செயல்பாட்டு நடைமுறையின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட முறைகள் அதாவது கயிறு வளையம், பொறி, வலை அல்லது காவல்துறை மற்றும் கால்நடைச் சேவைத் துறையின் அனுமதியுடன் பயன்படுத்தப்படும் மயக்க மருந்து துப்பாக்கி ஆகியவை மட்டுமே தெரு நாயைப் பிடிக்கப் பயன்படுத்த வேண்டும்.

எனவே, தற்போதுள்ள SOP-கள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதையும், அவற்றை மீறினால் நடவடிக்கை உண்டு என்பதையும் உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளை அவர் கேட்டுக் கொண்டார்.

விலங்குகள் மீதான கொடுமைகளைக் கண்டித்தும், AWA 2015 சட்டத்தைச் சீராக அமல்படுத்தக் கோரியும், இவ்வாண்டு மார்ச் 14 ஆம் தேதி நடைபெற்ற மலேசிய வழக்கறிஞர் சங்கத்தின் 80-வது வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் ஆனந்த் ராஜ் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!