
கூலாய், அக்-13–ஜோகூர், கூலாய் பெசாரில் உள்ள ரோஹிங்கியா குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்துக்கு, பெட்ரோல் குண்டு காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், பல வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதனால் வேலி ஒன்றில் சிறிய அளவில் தீப்பற்றியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயமோ பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை என ஜோகூர் காவல்துறைத் தலைவர் Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரவிய இரு காணொளிகளால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அக்காணொளிகளில், ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் சிலர் மலாய் மக்களைக் கூலாய்க்கு வருமாறு சவால் விட்டதுடன், அப்பகுதிக்கு வரத் துணிவில்லாதவர்கள் எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அக்காணொளிகள் தொடர்பில் காவல்துறைக்குப் புகாரும் கிடைத்துள்ளது. இதனிடையே, 30 வயதுடைய ரோஹிங்கியா நபர் ஒருவர், காணொளிகளில் தனது உருவம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அவற்றுடன் தனக்குத் தொடர்பில்லை எனப் புகார் கொடுத்துள்ளார்.
அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அச்சம்பவத்தை தீவிரமாகக் கருதுவதாகவும், ஜோகூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் Ab Rahaman எச்சரித்தார். தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது ஜோகூர் காவல்துறையின் அவசரத் தொடர்பு எண் 019-2792095, மாநிலக் காவல் தலைமையகச் செயல்பாட்டு அறை எண் 07-2212999 ஆகியவற்றிலோ தெரிவிக்கலாம்.



