
டாக்கா, ஜூலை-22- வங்காளதேசத்தில் இராணுவ போர் விமானம் பள்ளி மீது விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சீனா தயாரிப்பிலான அந்த F-7 BGI போர் விமானம், நேற்று வழக்கமான பயிற்சிகளுக்காக வங்காளதேச ஆயுதப் படைத் தளத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
எனினும், புறப்பட்ட வேகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், உள்ளூர் நேரப்படி 1 மணியளவில் தலைநகர் டாக்காவுக்கு வடக்கே Milestone பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் பயங்கர வெடிச் சத்தத்துடன் அது விழுந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் ஆவர். இதையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுமென வங்காளதேச இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளது.
போர் விமான விபத்துக்கானக் காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட அளவில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 1984-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த தெற்காசிய நாட்டில் நிகழ்ந்துள்ள மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.