
அண்மையில் தனது 11 வயது மகளுக்கு 1 மில்லியன் ரிங்கிட் செலவில் ஆடம்பர பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிவிட்டு, வெறும் 1 மில்லியன் செலவில் மட்டுமே தன் மகளுக்கு செலவு செய்ய முடிந்தது என்ற வருத்தத்துடன் பிறந்தநாள் காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றிய மலேசிய தொழிலதிபர் ஃபர்ஹானா சஹ்ராவை வலைதளவாசிகள் வசைப்பாடி வருகின்றனர்.
அச்சிறுமிக்கு ஆப்பிள் கணினி ஒன்று, ஒரு ரோலக்ஸ் கடிகாரம் மற்றும் ஒரு ‘டொயோட்டா வெல்ஃபயர்’ (Toyota Vellfire) பல்நோக்கு வாகனம் ஆகியவைகள் பிறந்தநாள் பரிசுகளாக வழங்கப்பட்டது, வலைதளவாசிகளை வாய் பிளக்கச் செய்துள்ளது.
அதீத ஆடம்பரமாக பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, இவ்வளவு குறைவாக செலவு செய்ததற்காக மகளிடம் மன்னிப்பு கேட்கும் தோரணை ஃபர்ஹானாவின் பணத்திமிரைக் காட்டுகின்றது என்று மக்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர், மகளை வளர்ப்பதற்கு இது சரியான வழி இல்லை என்றும் ஒரு குழந்தைக்கு காரைப் பரிசளிப்பதன் விளைவுகளைப் பற்றி முதலில் ஆராய வேண்டுமென்றும் கருத்துரைத்து வருகின்றனர்.
இதனிடையே, மற்றொரு வீடியோவில், ஃபர்ஹானா, தனது குழந்தையின் முன்னாள் வாகன ஓட்டுநருக்கு பாராட்டுச் சின்னமாக ஒரு சொகுசு காரை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.