
ஜோகூர் பாரு, ஜூலை 10 – கெலாங் பாத்தாவில் ,சுங்கை பூலாய்க்கு அருகே விபத்துக்குள்ளான AS 355N வகை ஹெலிகாப்டரில் இருந்த
ஐந்து போலீஸ்காரர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இருவருக்கும் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டுவரும் வேளையில் மூவரின் நிலை சீராக இருப்பாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
சுல்தானா அமினா மருத்துவமனையில் இருந்துவரும் மருத்துவ நிபுணர்கள் முடிந்தவரை அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்கி வருகின்றனர். ஹெலிகாப்டர் விபத்தில் காயம் அடைந்தவர்களில் மூவர் போலீஸ் ஆகாயப் படைப் பிரிவையும் இதர இருவர் Tanjung Kupang போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் என முகமட் காலிட் தெரிவித்தார்.
காயம் அடைந்த அந்த ஐந்து போலீஸ்காரர்களையும் சுல்தானா அமினா மருத்துவமனையில் பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களிடம் இத்தகவலை வெளியிட்டார். அவருடன் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் M .குமாரும் உடனிருந்தார்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்பதோடு இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை அதிகாரிகளிடமே விட்டுவிடுவதாக
அவர் கூறினார்.
மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கலந்துகொண்ட பயிற்சியின்போது கெலாங் பாத்தாவிலுள்ள மலேசிய கடல் அமலாக்க நிறுவனத்தின் படகு துறைக்கு அருகே போலீஸ் படைக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டர் இன்று காலையில் விபத்துக்குள்ளானது.