கோலாலம்பூர், ஜூன் 6 – தனது பயணிகளிடம் நடத்திய உரையாடலின்போது e-hailing வாடகை கார் ஓட்டுனர் இஸ்லாத்திற்கு அவதூறு ஏற்படுத்தினாரா என்பதை கண்டறிவதற்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் போலீஸ் இணைந்து பணியாற்றும். நேற்று ஜோகூர் பாருவில் இது தொடர்பான காணொளி வைரலானதைத் தொடர்ந்து புகார் கிடைக்கப் பெற்றதால் போலீசார் விசாரணையை நடத்தி வருவதாக போலீஸ் படைத் தலைவர் ரஷாருடின் உசேய்ன் ( Razarudin Husain) தெரிவித்தார். அந்த வாடகை கார் ஓட்டுனரின் உரை உணர்ச்சிகரமான உள்ளடக்கத்தை கொண்டிருந்த காணொளி நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த காணொளியை வெளியிட்ட அதன் சமூக வலைத்தளத்தின் உரிமையாளரின் கணக்கிற்கான விவரங்கள் பெறுவதற்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் தொடர்புகொள்ளப்பட்டு வருகிறது. தொடர்பு மற்றும் பல்லுடக சட்டத்தின் 233 ஆவது பிரிவு மற்றும் நிந்தனை சட்டத்தின் கீழ் இணைய வசதிகளை முறையற்றதாக பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரஷாருடின் தெரிவித்தார். மலேசியாவிலுள்ள முஸ்லீம்கள் இஸ்லாமிய விதிகளை அமல்படுத்த முயற்சிப்பதோடு, மதுபானம் மற்றும் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக 90 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளியில் சம்பந்தப்பட்ட வாடகை கார் ஓட்டுனர் கூறியுள்ளார். அந்த காரில் இருந்த பயணிகள் சுற்றுப்பயணிகள் என நம்பப்படுகிறது.