
கோலாலம்பூர், மார்ச்-3-இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக அண்மையில் கைதான பல்கலைக்கழக மாணவர், உண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு முவாலாஃப் என தெரியவந்துள்ளது.
யாரும் எதிர்பாராத இந்த அதிரடி திருப்பத்தை, பிரபல சுயேட்சை சமய சொற்பொழிவாளர் ஃபிர்டாவுஸ் வோங் தனது ஃபேஸ்புக்கில் உறுதிப்படுத்தினார்.
விக்னேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அவ்விளைஞர், கடந்தாண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி தன்னார்வ அடிப்படையில் இஸ்லாத்தைத் தழுவினார்; Muhammad Zain என்ற முஸ்லீம் பெயரையும் ஏற்றுக் கொண்டார்.
“ஆரம்பத்தில் மதம் குறித்து ஆர்வத்துடன் இருந்தார்; நான் தான் அவரை இஸ்லாத்தைத் தழுவச் செய்ய வேண்டும் என Instagram-மில் தொடர்ந்து செய்தி அனுப்பிகொண்டே இருந்தார். செயலிலும் சொல்லிலும் பண்பானவர், அடக்கமானவர்”
இப்படிப்பட்டவர், அல்-குர்ஆனை மிதித்தார் என கேள்விப்படும் போது நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்ட ஃபிர்டாவுஸ், அவருக்குள் என்னதான் நடந்திருக்கும் என்பது புரியாத புதிராக இருப்பதாக சொன்னார்.
அம்மாணவரை யாராவது தூண்டி விட்டார்களா? சினமூட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது நடந்திருக்குமோ என கேள்விகளை எழுப்பிய ஃபிர்டாவுஸ், அவருக்கு உதவ விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், அதற்காக அவர் செய்தது தவறில்லை என்று ஆகி விடாது; இஸ்லாத்தை அவமதித்த குற்றத்திற்கு, அவர் முஸ்லீமோ இல்லையோ…தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
இந்தப் பதிவுகூட அவ்விளைஞரை வக்காலத்து வாங்குவதற்று அல்ல என்றும் ஃபிர்டாவுஸ் வோங் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவரான அவ்விளைஞர் மீது இன்று காலை குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.



