![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/01/MixCollage-06-Jan-2025-07-32-PM-7107.jpg)
புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி-6 – பினாங்கில் வாக்குவாதத்தின் போது தனது அத்தையை கத்தியால் குத்தி காயம் விளைவித்த 14 வயது சிறுமி, நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவாள்.
புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்தில் நாளை அவள் நிறுத்தப்படுவாள் என செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஹெல்மி ஆரிஸ் (Helmi Aris) உறுதிப்படுத்தினார்.
ஆயுதத்தைக் கொண்டு காயம் விளைவித்ததாக குற்றவியல் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்படுமென, NST-யிடம் அவர் சொன்னார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறையுடன், அபராதமும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
முன்னதாக, இன்று முடிவடைந்த அச்சிறுமியின் தடுப்புக் காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஜனவரி 3-ம் தேதி ஜாலான் பிறை ஜெயாவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் காலை 11 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
குடும்பப் பிரச்னைக் காரணமாக 4 நாட்களாக தனது அத்தை வீட்டில் அச்சிறுமி தங்கியிருந்தாள்.
இந்நிலையில் சம்பவத்தன்று தன் தாய் வீட்டுக்கே செல்வதாகக் அவள் கூறிய போது, அத்தை தடுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில், திடீரென அத்தையை சிறுமி கத்தியால் குத்தினாள்.
அதில் இடப் பக்க வயிற்றில் காயமடைந்த 30 வயது அம்மாது உடனடியாக செபராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்த போலீசார் அச்சிறுமியைக் கைதுச் செய்தனர்.