
ஜோகூர் பாரு, நவம்பர்-27, வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது ஜோகூரில் உணவகங்கள் உட்பட அனைத்து வணிக வளாகங்களிலும் முஸ்லீம் ஆண்களாக உள்ள உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும், கட்டாயம் அவ்வளாகங்களை விட்டு வெளியேற வேண்டும்.
ஒவ்வோர் ஆண் முஸ்லீமும் அந்த மதக்கடமையை நிறைவேற்றுவதை உறுதிச் செய்வதே அவ்வுத்தரவின் நோக்கமென, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹமட் ஃபாரெட் மொஹமட் காலிட் (Mohd Fared Mohd Khaled) கூறினார்.
முஸ்லீம் ஆண்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது வியாபாரம் செய்யக் கூடாது, வேலை செய்யக் கூடாது, சாப்பிட்டுக் கொண்டிருக்கவும் கூடாது.
எனினும், முஸ்லீம் பெண்களுக்கும், முஸ்லீம் அல்லாதோருக்கும் அதில் விதிவிலக்கு என அவர் சொன்னார்.
ஜோகூரில் அனைத்து முஸ்லீம் ஆண்களும் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பதை உறுதிச் செய்ய, மாநில இஸ்லாமிய சமயத் துறை அமுலாக்க சோதனைகளை மேற்கொள்ளுமென்றும், மொஹமட் ஃபாரெட் கூறினார்.
ஜோகூரில் அரசாங்க மற்றும் தனியார் துறைக்கான வெள்ளிக்கிழமை ஓய்வு நேரம், வரும் ஜனவரி 1 முதல், ஒன்றரை மணி நேரங்களிலிருந்து 2 மணி நேரங்களாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி (Datuk Onn Hafiz Ghazi) கடந்த வியாழக்கிழமை அதனை அறிவித்தார்.