வாஷிங்டன், ஜூலை 31 – அமெரிக்காவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட கொடிகளை மட்டுமே இனி மத்திய அரசாங்கம் வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.
குடியரசுக் கட்சியின், மைனேயைச் சேர்ந்த செனட்டர் சூசன் காலின்ஸ் மற்றும் ஓஹியோ ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஷெராட் பிரவுன் ஆகியோர் அந்த தீர்மானத்தை முன்வைத்துள்ளனர்.
மில்லியன் கணக்கான அமெரிக்க கொடிகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, சீனாவிலிருந்து அதிகமான கொடிகள் வாங்கப்படுகின்றன.
எனினும், அமெரிக்க கொடிகள் அவை பிரதிநிதிக்கும் தாயகத்திலேயே தயாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இது வெறும் மாற்றம் அல்ல. நாட்டின் மரியாதைக்குரிய கொடிகளை இது பாதுகாக்கும் என்பதோடு, இதன் வாயிலாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, அமெரிக்க தொழில்துறைகளுக்கும் ஆதரவளிக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த தீர்மானம் விரைவில் சட்டமாக அங்கீகரிக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக அதன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
2015-ஆம் ஆண்டு, நான்கு மில்லியன் டாலர் மதிப்பிலான கொடிகள், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.