
ஓக்லஹோமா, ஜூலை-4 – குழந்தைகள் நல மருத்துவரான இந்திய வம்சாவளி பெண், தனது 4 வயது மகளை கொன்று, அவள் நீரில் மூழ்கி மாண்டதாக நாடகமாடியதற்காக அமெரிக்காவில் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
ஓக்லஹோமாவைச் சேர்ந்த 36 வயது மருத்துவர் நேஹா குப்தா, ஜூன் 27-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக முதன்மை படுகொலை குற்றச்சாட்டின் கீழ் கைதானார்.
சம்பவத்தன்று, ஃபுளோரிடாவில் உள்ள ஒரு குறுகிய கால வாடகை வீட்டில் தங்கியிருந்த போது, நேஹாவின் மகள் ஆரியா தலாத்தி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மகள் இரவில் படுக்கையிலிருந்து கிளம்பி வெளியே உள்ள நீச்சல் குளத்தில் தவறுதலாக மூழ்கி இறந்ததாக, நேஹா போலீஸிடம் முதலில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
ஆனால் உடற்கூறு சோதனையில், குழந்தையின் நுரையீரல் அல்லது வயிற்றில் தண்ணீர் இல்லை என்பது தெரியவந்தது – அதாவது, குழந்தை மூழ்கி இறக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
மாறாக, குழந்தையின் வாயில் காயங்கள் மற்றும் கன்னங்களில் அடிபட்டதில் ஏற்பட்ட புண்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் விசாரணை அதிகாரிகள் இது மூச்சு அடைத்து கொல்லப்பட்டதைக் குறிப்பதாக தெரிவித்தனர்.
குழந்தை இறந்துபோனதை மறைக்க, அவளை நீச்சல் குளத்தில் போட்டு நீரீல் மூழ்கி மாண்டதாக பெற்றத் தாயே நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து போலீசார், நேஹா குப்தாவை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
மகளை வளர்ப்பதில் முன்னாள் கணவருடன் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நேஹா, எதனால் சொந்த மகளையே கொல்லத் துணிந்தார் என்பது புதிராக உள்ளது.
மருத்துவரான முன்னாள் கணவர் சௌரப் தலாத்திக்கும், குழந்தை ஃபுளோரிடாவுக்கு சென்றதும், அந்த வாடகை வீட்டில் தங்கியதும் தெரியாது என விசாரணையில் கண்டறியப்பட்டது.
தாயே, அதுவும் ஒரு குழந்தை நல மருத்துவரே பெற்ற மகளைக் கொலைச் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.