
புத்ராஜெயா, ஜூலை-9-அரசு ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை உயர்த்துவது குறித்து நீண்டகாலமாக நிலவி வந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவ்வாறு செய்ய அவசியமில்லை என அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய தொடர்புத் துறை அமைச்சரும், மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், இதன்மூலம், அரசு ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வு வயது ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு 60 வயதாகவே தொடரும் என்றார்.
கடந்தாண்டு மே மாதம், சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சைட், ஊழியர்களின் ஓய்வு வயதை 60-லிருந்து 65-ஆக உயர்த்தப் பரிந்துரைத்திருந்தார்.
ஆரோக்கியமான மற்றும் திறன்மிக்க ஊழியர்களின் பங்களிப்பைத் தொடர்ந்து பெற வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் அப்பரிந்துரையை அவர் முன்வைத்தார்.
இந்நிலையில், அதற்கு அவசியமில்லை என அமைச்சரவை முடிவுச் செய்துள்ளது.



