Latestமலேசியா

அவதூறுகளை பரப்புவர் மீது சட்ட நடவடிக்கை பாயும்! – டத்தோ T முருகையா எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் மஇகா குறித்து பரப்பப்படும் அவதூறுகளையும் பொய்யான தகவல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ T.முருகையா கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, ஜொகூரில் உள்ள மஇகா கட்டடம் விற்கப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் தெரிவித்தார்.

“மஇகாவைப் பற்றிய தவறான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை எட்டு பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மஇகாவின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் எட்டு முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, கூட்டுப் பிரார்த்தனை, குடும்ப தின விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

அடுத்ததாக, சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் வரும் ஜூன் 28ஆம் தேதி காலை முதல் மாலை வரை 152 தொகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன என்றார்.

இந்த மருத்துவ முகாம்களில் அனைத்து இன மக்களும் பங்கேற்று பயனடையலாம் என்றும், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், ஜூலை 4ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சுப் போட்டி, இரு மாநிலங்களின் இடைத்தேர்தல் காரணமாக ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மஇகா தொகுதிகளிலும் நெடுஓட்ட நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு எஸ்.எம். முத்து தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.

வரவிருக்கும் ஜொகூர் மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு, 56 பகுதிகளில் மஇகா பிரதிநிதிகள் களமிறங்கி தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“ஜொகூர் மாநிலம் தேசிய முன்னணியின் முக்கியமான கோட்டையாகும். இம்முறையும் இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். தேசிய முன்னணி 50 இடங்களை வெல்லும் இலக்குடன் களமிறங்கியுள்ளது,” என்றும் டத்தோ முருகையா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!