புத்ராஜெயா, டிசம்பர்-16, மலேசியா அடுத்தாண்டு ஆசியான் தலைவர் பதவியை ஏற்கும் போது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தனிப்பட்ட ஆலோசகராக, தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவாட் ( Thaksin Shinawatra) செயல்படுவார்.
அதிகாரப்பூர்வமற்ற முறையில் அமைக்கப்படும் பல்வேறு ஆசியான் நாடுகளைச் சேர்ந்த ஒரு குழு, தக்சினுக்கு உதவியாக இருக்குமென, டத்தோ ஸ்ரீ அன்வார் அறிவித்தார்.
தக்சின் போன்ற அரசதந்திரிகளின் அனுபவம், ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியாவுக்கு பெரும் உதவியாக இருக்குமென பிரதமர் சொன்னார்.
தக்சினின் கடைசிப் புதல்வியும், தாய்லாந்தின் நடப்புப் பிரதமருமான பேடோங்டர்ன் ஷினவத்ராவுடன் (PaetongtarnShinawatra) புத்ராஜெயாவில் கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்திய போது, டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
அன்வாரின் அவ்வறிவிப்பை வரவேற்ற பெடோங்டர்ன், அதற்கு மலேசியாவுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
2001 முதல் 2006 வரை தாய்லாந்துப் பிரதமராக இருந்த தக்சின், இராணுவப் புரட்சியில் வீழ்த்தப்பட்டு, 15 ஆண்டுகள் நாடு கடந்து வாழ்ந்து வந்தார்.
கடந்தாண்டு தாய்லாந்து திரும்பியவருக்கு, ஊழல் மற்றும் அதிகார முறைகேடு தொடர்பில் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்நாட்டு மன்னரால் அது ஓராண்டாகக் குறைக்கப்பட்டது.
6 மாதம் சிறையிலிருந்த 74 வயது தக்சின் தற்போது பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.