
தோயோயாஷி, செப்டம்பர்-20,ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தேசிய கராத்தே வீரர்கள் கே. தேவேந்திரன் மற்றும் எச். சூரியா சங்கர் ஆகியோர் நாட்டிற்கு முதல் இரு வெண்கலப் பதக்கங்களை வென்று தந்துள்ளனர்.
ஆடவருக்கான 55 கிலோவுக்குட்பட்ட ‘குமித்தே’ பிரிவில் களம் கண்ட 22 வயது கே. தேவேந்திரன், ஆரம்பக் கட்ட தோல்விக்குப் பிறகு Repechage சுற்றின் மூலம் மீண்டும் எழுச்சி பெற்றார்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், நேப்பாள வீரரை 9-க்கு 1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மலேசியாவின் முதல் பதக்கத்தை அவர் பெற்றுத் தந்தார்.
அவரைத் தொடர்ந்து, ஆடவருக்கான 60 கிலோவுக்குட்பட்ட ‘குமித்தே’ பிரிவில் போட்டியிட்ட எச். சூரியா சங்கர், அரையிறுதியில் சறுக்கினாலும் மனம்தளராமல் போராடி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி இரட்டிப்பு பெருமை சேர்த்துள்ளார்.
இவ்விரு வீரர்களின் சிறப்பான ஆட்டம், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியக் குழுவின் பதக்க வேட்டைக்கு உற்சாகமான தொடக்கமாக அமைந்துள்ளது.



