
அம்பாங், செப்டம்பர்-21,கனமழையைத் தொடர்ந்து கோலாலம்பூர் மற்றும் அம்பாங்கின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீர் வெள்ளமேற்பட்டது.பல வீடமைப்புப் பகுதிகளில் வெள்ளம் புரண்டோடடியது.
அதில் மூழ்கிய இரு கார்களில் சிக்கித் தவித்த மூவரை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
அம்பாங், Jalan Mengkudu-வில் சுமார் ஒரு மீட்டர் ஆழ வெள்ள நீரில் சிக்கிய வாகனத்திலிருந்து ஒருவர் மீட்கப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில், கோலாலம்பூர், Taman U-Thant-னில் உள்ள டேசா அங்காசா அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே 60 சென்டிமீட்டர் ஆழ நீரில் மூழ்கிய BMW காரில் சிக்கிய இருவர் துரிதமாக மீட்கப்பட்டனர்.
இதனிடையே, அம்பாங், Ukay Perdana Heights-சில் வெள்ளம் சூழ்ந்த வீட்டொன்றில், வெள்ள நீரில் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என்ற அச்சம் காரணமாக விடுக்கப்பட்ட அவசர அழைப்பையும் ஏற்று தீயணைப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
எனினும் இந்தச் சம்பவங்களில் எவருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.



