Latestமலேசியா

ஆட்சியமைக்க போதுமான இடங்களைப் பெற்றுள்ளோம் – நெகிரி செம்பிலான் மாநில பாரிசான் நேஷனல் அறிவிப்பு

சிரம்பான், ஏப்ரல்-28-நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணுக்கு வழங்கி வந்த ஆதரவை 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை தங்களிடம் உள்ளதாக பாரிசான் நேஷனல் (BN) அறிவித்துள்ளது.

கொள்கை வேறுபாடுகளைக் கடந்து, எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஒரு நிலையான ஆட்சியை வழங்கத் தயாராக இருப்பதாக BN மாநிலத் தலைமை தெரிவித்துள்ளது.

இது ஓர் இக்கட்டான நிலை என்றும், இந்த நேரத்தில் மக்கள் நலனே முக்கியமென்றும் மாநில பாரிசான் நேஷனல் அறிக்கை வாயிலாகக் கூறியது.

நெகிரியில் 36 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கும் நிலையில், ஆட்சியமைக்க 19 இடங்கள் தேவையாகும்.

அப்படிப் பார்த்தால், 14 இடங்கள் கொண்டுள்ள பாரிசானும், 5 தொகுதிகளை வைத்துள்ள பெரிக்காத்தானும் 19 இடங்களுடன் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பது. குறிப்பிடத்தக்கது.

இது நடந்தால், மாநில அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

இந்நிலையில், இத்தகைய குழப்பம் நிலவினாலும், நெகிரி செம்பிலானில் திடீர் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

என்றாலும், இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் நெகிரி செம்பிலான் சமஸ்தானாதிபதிக்கும், மாநில சட்டமன்ற நடைமுறைகளுக்குமே உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்து கூட்டரசு அளவிலான ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆலோசிக்க, பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி விரைவில் பிரதமரைச் சந்திக்க உள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!