கோலாலம்பூர், செப்டம்பர்-24, மலேசியப் போக்குவரத்துச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும், இல்லையேல் நடவடிக்கைப் பாயுமென, வெளிநாட்டு வாகனமோட்டிகள் உள்ளிட்ட அனைத்து சாலைப் பயனர்களையும் புக்கிட் அமான் எச்சரித்துள்ளது.
வெளிநாட்டு வாகனப் பதிவு எண் பட்டைகளுடன் exotic hyper cars எனப்படும் உயர்தர கார்கள், சாலை விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஆபத்தான முறையில் மலேசியச் சாலைகளில் ஓட்டிச் செல்லப்படுவதைக் காட்டும் வீடியோக்கள் வைரலானதை அடுத்து, அவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கார்கள், கம்போடியாவில் தொடங்கிய Gumball 3000 பேரணியின் ஒரு பகுதியாகும் என புக்கிட் அமான் போக்குவரத்து குற்றப்புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறை உறுதிபடுத்தியது.
ஆபத்தாக ஓட்டப்பட்டது, அவசரப் பாதைகளைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களை அவைப் புரிந்திருக்கின்றன.
இதுவரை அதிகாரப்பூர்வ புகார்கள் எதுவும் பெறப்படவில்லை; என்றாலும் அது குறித்து தகவல் தெரிந்தோர் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு போலீஸ் கேட்டுக் கொண்டது.
Gumball 3000 பேரணி, தனது 25-வது நிறைவாண்டைக் கொண்டாடும் விதமாக, செல்வாக்குமிக்க 100 பிரபலங்களை அந்த உயர்தர கார் பேரணியாக அழைத்துச் செல்கிறது.
என்றாலும், பங்கேற்பாளர்கள் சாலையில் வேகமாகச் செல்வதும், ரப்பரை எரிப்பதும், அவசரப் பாதைகளைப் பயன்படுத்துவதும் வைரல் வீடியோக்களில் வெளியாகி முகம் சுளிக்க வைத்துள்ளது.