பத்து பஹாட், அக்டோபர்-23,
ஜோகூர், பத்து பஹாட்டில் சாலையில் ‘zig-zag’ சாகசம் புரிந்தது உள்ளிட்ட ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளோட்டிய ஆடவனுக்கு, 100 மணி நேர சமூகச் சேவைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 20 வயது Halim Yusof-புக்கு, பத்து பஹாட் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தண்டனையை வழங்கியது.
அதோடு, மாதந்தோறும் JKM எனப்படும் சமூக நலத் துறைக்குச் சென்று கையெழுத்திட வேண்டும், JKM-மின் அட்டவணையைப் பின்பற்றி சமூகச் சேவையை மேற்கொள்ள வேண்டும், கொடுத்த முகவரியில் தான் தங்க வேண்டுமென்ற கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
கடந்தாண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி, ஜாலான் குளுவாங் – ஆயர் ஹீத்தாம் சாலையில் ‘zig-zag’ சாகசத்தோடு, தனது தாடையை மோட்டார் சைக்கிளின் மீட்டரில் படும்படி அவர் ஓட்டிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அது ரோந்துப் போலீசாரின் கண்ணில் பட்டு, அவ்விளைஞன் கைதாகி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.