
ஜோகூர் பாரு, ஜூலை 24 – ஜோகூர் மாநில மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறைக்கு சுகாதார அமைச்சு (KKM) உடனடி கவனம் செலுத்தி, தீர்வு காண வேண்டும் என்று ஜோகூர் முதல்வர் டத்தோ ஓன் ஹபீஸ் காசி (Datuk Onn Hafiz Ghazi) கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், சுல்தானா அமினா (HSA), சுல்தான் இஸ்மாயில் (HSI) மற்றும் பாசிர் கூடாங் (HPG) மருத்துவமனைகளில் 2,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.
இதனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடும் பணிச்சுமையைச் சந்தித்து வருவதுடன், சிலர் பணியை விட்டு விலகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுல்தானா அமினா மருத்துவமனையில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். எனவே, அங்கு பணியாளர் நியமனத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சை அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு அடுத்த மாதம் தற்காலிகமாக மாற்றப்படவுள்ளதுடன், சுமார் 159 மில்லியன் ரிங்கிட் செலவில் மின்சார மற்றும் இயந்திர வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நடவடிக்கைகள் மூலம் ஜோகூர் மக்களுக்கு மேலும் பாதுகாப்பான மற்றும் தரமான மருத்துவச் சேவையை வழங்க முடியும் என்று ஓன் ஹபீஸ் தெரிவித்தார்.



