
கோலாலம்பூர், செப்-8-நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தை அடுத்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள 55 மலேசியர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினர் விளக்கம் கோரி வருகின்றனர். தேடல் நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் ‘கடைசியாக அறியப்பட்ட இடங்கள்’ தொடர்பான விவரங்களை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல் போன மலேசியர்களின் கடைசி இருப்பிடங்கள் தொடர்பாக குடும்பத்தினர் வழங்கிய தகவல்களைத் தவிர புதிய தகவல்கள் ஏதேனும் அரசிடம் உள்ளனவா என்பதை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என Malaysia Solidarity: Families In Hope’ (Masfih) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார். SMART குழு தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ள பகுதிகளில், காணாமல் போன 55 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் எந்த இடமும் இடம் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேடுதல் நடவடிக்கையின் திசையையும் காணாமல் போனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நிலையையும் நேரடியாகப் பாதிக்கக்கூடிய இத்தகைய முக்கியத் தகவல்கள் குடும்பத்தினருடன் ஏன் பகிரப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காணாமல் போனவர்களுடனான கடைசித் தொடர்புகள், இருப்பிடங்கள், அவர்கள் காணாமல் போன காலக்கட்டம் உள்ளிட்ட தகவல்களை குடும்பத்தினர் ஏற்கனவே அதிகாரிகளிடம் வழங்கி விட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பத்தினரிடமிருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது தொடர்பான முரண்பாடுகளுக்கும் விளக்கம் தேவை. வெளியுறவு அமைச்சு கூறியபடி செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் 55 மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தால், ஒரு குடும்ப உறுப்பினர் மட்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி மாதிரி வழங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்றும் மணிவண்ணன் வினவினார்.
தேடுதல் நடவடிக்கை தொடங்கி ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. தேடுதலுக்கு நேரடியாக உதவக்கூடிய அடிப்படைத் தகவல்கள் கூட குடும்பத்தினருக்கு தெளிவாகக் கிடைக்காதது ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. SMART குழு பயன்படுத்தும் கடைசியாக அறியப்பட்ட இடங்கள், அந்தத் தகவல்களின் ஆதாரம், தேடுதல் நடைபெறும் பகுதிகள் மற்றும் அவற்றைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும், 55 மரபணு மாதிரிகள் தொடர்பான முரண்பாட்டையும் தெளிவுபடுத்த வேண்டும் என மணிவண்ணன் வலியுறுத்தினார்.



