பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்-3 – மலேசியா 2021 முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை இணைய மோசடிகள் காரணமாக 318 கோடி ரிங்கிட் நட்டத்தைச் சந்தித்துள்ளது.
தெரிந்த வரைக்கும் அவ்வளவுதான்; தெரியாதவற்றையும் சேர்த்தால் கணக்கு எங்கேயோ போய் நிற்குமென, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ ச்சிங் (Teo Nie Ching) தெரிவித்தார்.
சமூக ஊடக சேவை வழங்குநர்களுடன் என்னதான் தொடர் கலந்தாய்வுகள் நடத்தி வந்தாலும், இணையக் குற்றங்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதையே அது காட்டுகிறது.
இணைய மோசடிகள் தொடர்பில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 15 வரையில் மட்டுமே மொத்தமாக 32,676 உள்ளடக்கங்களும் பதிவுகளும் நீக்கப்பட்டன.
மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையம் (MCMC) 2023-ல் நீக்கிய பதிவுகளின் எண்ணிக்கையை விட இது 6,297 அதிகமாகும்.
AI அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களின் முக்கியத் தளமாகக் சமூக ஊடகங்கள் விளங்குகின்றன.
எனவே சமூக ஊடகங்களையும் அடிப்படை வசதிகளாக வகைப்படுத்த நேரம் வாய்த்திருப்பதாக துணையமைச்சர் சொன்னார்.
அதாவது நீர், மின்சாரம், இணையச் சேவை போன்று மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளாக facebook, Instagram, Tik Tok உள்ளிட்டவை கருதப்படும்.
அது நடந்தால், அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவை நடக்க வேண்டி வரும்; அதன் மூலம் ஆபத்தான உள்ளடக்கங்கள் குறைந்து, பயனர்களின் பாதுகாப்பும் உறுதிச் செய்யப்படுமென நீ ச்சிங் சொன்னார்.