ஜெர்மனி, ஜூலை-2, இந்த EURO 2024 இறுதிச் சுற்றே, தாம் பங்கேற்கும் கடைசி ஐரோப்பியக் கால்பந்துப் போட்டியாகும் என, போர்ச்சுகல் கோல் மன்னன் கிறிஸ்தியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) உறுதிபடுத்தியுள்ளார்.
“அடுத்த EURO நடக்கும் போது எனக்கு 43 வயதாகியிருக்கும்; அப்போது நான் விளையாடும் சாத்தியம் இல்லை; எனவே இதுவே என கடைசி EURO என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக வலம் வரும் ரொனால்டோ கூறினார்.
இந்த கால்பந்து வாழ்க்கையும் அதன் மூலம் உலகம் முழுவதிலுமிருந்து தனக்கு கிடைத்த கோடான கோடி ரசிகர்களையும் எண்ணி பூரிப்படைவதாக ரொனால்டோ சொன்னார்.
கால்பந்து உலகின் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான 39 வயது ரொனால்டோ, 6 முறை EURO இறுதிச் சுற்றில் பங்கேற்ற ஒரே ஆட்டக்காரர் ஆவார்.
அதோடு, 14 கோல்களுடன் EURO வரலாற்றில் அதிக கோலடித்த ஆட்டக்காரர் என்ற பெருமையும் அவரையே சாரும்.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்த EURO 2024 போட்டியில் இன்று அதிகாலை பெனால்டிகளின் வழி 3-0 என சுலோவேனியாவைத் தோற்கடித்து போர்ச்சுகல் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிப்பெற்றது.
அதில் போர்ச்சுகல் ஃபிரான்சுடன் மோதவிருப்பதால், ரொனால்டோ – கிலியன் ம்பாப்பே (Kylian Mbape) இருவருக்கும் இடையிலான உச்சக்கட்ட மோதல், கால்பந்து இரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையலாம்.