
கோலாலம்பூர், அக்டோபர்-25,மலேசியாவை 2030-ஆம் ஆண்டுக்குள் AI நாடாக உருவாக்கும் இலக்குடன், அரசாங்க இலாகாக்களில் புதியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, புத்ராஜெயாவில் பணியாற்றும் இந்திய அரசு ஊழியர்களின் சங்கமான இமயம், இலக்கவியல் அமைச்சு, MyDigital மற்றும் Asia School of Business ஆகியவற்றுடன் இணைந்து, இரண்டு நாள் AI தலைமைத்துவப் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது.
கோலாலம்பூரில் நடைபெற்ற இப்பயிற்சியை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தொடக்கி வைத்தார்.
போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீண்டகாலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், அரசாங்கச் சேவைகளை மேம்படுத்தவும் அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என அவர் தமதுரையில் வலியுறுத்தினார்.
பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த 60 இந்திய அரசு ஊழியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளதாக, இமயம் தலைவர் Dr சதிஷ்குமார் கே. முத்துசாமி கூறினார்.
இரண்டு-நாள் பயிற்சியின் முடிவில், தங்களது பணியிடங்களில் பயன்படுத்தக்கூடிய AI செயலிகளை உருவாக்குவதும் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.



