பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 1 – மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இணைந்து, நேற்று இந்து ஆலயங்களைச் சமூக மையங்களாக மேம்படுத்தும் 2024ஆம் ஆண்டிற்கான தேசிய மாநாட்டை ஏற்று நடத்தியது.
இதனை ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மலேசியாவிலுள்ள இந்து ஆலயங்கள் மதம், சமயம் பறைசாற்றும் தலமாக மட்டும் செயல்படாமல், அவை ஒரு சமூக மையமாகத் திகழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆலயங்கள் சமூக மையங்களாக இயங்குவது சமூகத்தில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் என அவர் தமதுறையில் குறிப்பிட்டார்.
அவ்வகையில், நாட்டில் இந்து வழிபாட்டுத் தலங்கள் சமூக மையங்களாக உருமாற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும் என்றார், அவர்.
இந்த மாநாட்டில், இந்து ஆலயங்களைச் சமூக நலச் சேவை மையங்களாக உருமாற்றுவதற்கான உத்திகளும் வழிமுறைகளும் பரிசீலிக்கப்பட்டன.
மேலும், ஆலய மேலாண்மை, பதிவு மற்றும் தலைமைத்துவத்துக்கான உரைகளும் நடைபெற்றன.
வெறுமனே தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி, கேள்வி பதில் அங்கமும் இம்மாநாட்டில் இடம்பெற்றது.
தேசிய அளவிலான இந்தக் கோயில் மாநாட்டில் நாடு தழுவிய நிலையில் ஆலயத் தலைவர்களும் பிரதிநிதிகளும் உட்பட இந்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.